உணவகத்தின் கை கழுவும் பகுதிக்கு அருகில் விடப்பட்ட ஒரு பெரிய பைக்குள் இருந்த டிபன் பாக்ஸ் பையில் குண்டு இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் மூலம் தெரிகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் வெள்ளிக்கிழமை மதியம் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு குண்டு வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளின்படி, கண்ணாடி மற்றும் முகமூடி அணிந்த நபர் ஒருவர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். முகத்தை ஓரளவு மறைத்தபடி மாஸ் அணிந்திருக்கும் அந்த நபரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகிக்கப்படும் நபர் உணவகத்திற்குள் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு வெளியேறியுள்ளார். உணவகத்தின் கை கழுவும் பகுதிக்கு அருகில் விடப்பட்ட ஒரு பெரிய பைக்குள் இருந்த டிபன் பாக்ஸ் பையில் குண்டு இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் மூலம் தெரிகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 4 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சியில் தொப்பி அணிந்து செல்லும் நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அவர் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்துள்ளது. மேலும் 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் ஒன்பது பேர் காயமடைந்தனர். பெரிய சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதியில் தீ மற்றும் புகை மூட்டம் ஏற்பட்டது. ஆனால் விரைவாக தீ பரவாமல் மட்டுப்படுத்தப்பட்டது. 45 வயதான ஒரு பெண்மணிக்கு கிட்டத்தட்ட 40 சதவீத காயங்கள் ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். உணவகத்தின் அருகே இருந்த மற்றவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் ராமேஸ்வரம் ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட கருவிக்கும் மங்களூரு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஷாரிக் என்பவர் தீக்காயங்களுடன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது.
புவி வெப்பத்தைக் குறைக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஐடியா!
