5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட்டை தள்ளி வைக்க முடியாது. இதனால், வாக்காளர்கள் ஈர்க்கப்படமாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேசம்,கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்கி, மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. ஆனால், பிப்ரவரி 1-ந்தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், வாக்காளர்கள் ஈர்க்கப்பட்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆதலால், தேர்தல் முடிந்தபின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின.
பட்ஜெட்டை தேர்தலுக்கு பின் தாக்கல் செய்யக்கோரி உத்தரவிடுமாறு வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு தலைமைநீதிபதி ஜே.எஸ். கேகர், நீதிபதிகள் என்.வி. ரமணன், டி.ஓய். சந்திரசூத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா வாதிடுகையில், “ மத்தியஅரசு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்து, நடத்தை விதிமுறைகளை மீறுகிறது. தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கும் சேர்த்து மத்திய அரசு பட்ஜெட்டில் சலுகைகளை அறிவிக்கும். கடந்த காலத்தில் இதுபோல் தேர்தலுக்காக பட்ஜெட் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், தாமதமாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் '' என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள் தரப்பில், “ உங்கள் வாதம் அபத்தமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மத்தியில் உள்ள அரசு தேர்தலை நடத்தக்கூடாது என்பது போல் இருக்கிறது. இந்த வாதத்தை ஏற்கமுடியாது'' எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
