Asianet News TamilAsianet News Tamil

அசாம் குடியுரிமைச் சட்டப் பிரிவு 6A செல்லும்: உச்ச நீதிமன்றம்!!

அசாமின் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டப் பிரிவான 6A செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த சட்டப்பிரிவு, 1966 மற்றும் 1971 க்கு இடையில் அசாமில் நுழைந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது. இந்த முடிவு அசாம் NRC பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Supreme Court upholds Section 6A of Citizenship Act in 4:1 verdict
Author
First Published Oct 17, 2024, 12:00 PM IST | Last Updated Oct 17, 2024, 12:24 PM IST

அசாமின் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டப் பிரிவான 6A செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உறுதி செய்தது.

இந்த அரசியலமைப்புச் சட்டமானது அசாம் ஒப்பந்தத்தின் கீழ் வரும் புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது. இந்த சட்டப் பிரிவு 6A குடியுரிமைச் சட்டம், 1955 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது.

பிரிவு 6A இன் கீழ், ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971 க்கு இடையில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் மற்றும் அசாமில் வசிப்பவர்கள், தங்களை இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், சுந்த்ரேஷ், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் 4:1 என்ற பெரும்பான்மையில் இந்த சட்டப்பிரிவை உறுதி செய்தது. இவர்களில் நீதிபதி பர்திவாலா மட்டும் மறுப்பு தெரிவித்து இருந்தார். 

நீதிபதி காந்த் எழுதிய பெரும்பான்மை தீர்ப்புடன் ஒத்துப்போகும் தனித் தீர்ப்பைப் படிக்கும் போது, ​​தலைமை நீதிபதி இதை தெரிவித்தார். பெஞ்சில் அதிகமானோர் இந்த சட்டப்பிரிவை உறுதி செய்த காரணத்தால், அதுவே தீர்ப்பாக அமைகிறது.

"மத்திய அரசு இச்சட்டத்தின் பயன்பாட்டை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கலாம். ஆனால் அது அசாமிற்கு என்று தனித்துவமானது என்பதால் அவ்வாறு செய்யப்படவில்லை'' என்பதையும் நீதிபதி உறுதி செய்தார்.

இந்த வழக்கின் இன்றைய முடிவு அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​1971 வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின்னர், கிழக்கு வங்காள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை ஓரளவு சரிசெய்வதற்காக இந்த சட்டப்பிரிவு  அறிமுகப்படுத்தப்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் எந்த அளவுக்கு சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்பது தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

மேலும், இந்த அமைச்சகம் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், 2017 மற்றும் 2022 க்கு இடையில் 14,346 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டதாகவும், ஜனவரி 1966 மற்றும் மார்ச் 1971 க்கு இடையில் அசாமில் நுழைந்த 17,861 புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டத்தில் பிரிவு 6A என்ன கூறுகிறது?

வங்களாதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்குள் அதிகளவில் புலம்பெயர்ந்தோர் நுழைந்தனர். இதை அசாம் மாணவர் சங்கம் கடுமையாக எதிர்த்து வந்தது. மாணவர்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போராடி வந்தனர். இதையடுத்து, மத்திய அரசில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசுக்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்திற்கும் (AASU) இடையே அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்  தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. 

சட்ட விரோதமாக கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்திற்குள் குடிபெயர்ந்து வந்தனர். இதன் அடிப்படையில் யார் வெளிநாட்டினர் என்பதை உறுதி செய்வதற்கு என்று கொண்டு வரப்பட்டதுதான் 6A  சட்டப்பிரிவு. ஜனவரி 1, 1966 -க்கு முன்பு அசாம் மாநிலத்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். இவர்கள் சாதாரணமான இந்திய குடிமக்கள் என்று இந்த சட்டப்பிரிவு உறுதி செய்கிறது. 

ஜனவரி 1966 மற்றும் மார்ச் 1971 க்கு இடையில் அசாமில் நுழைந்தவர்கள் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விதிகளின்படி இந்திய குடிமக்களாக பதிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு  இருந்தது. அப்படி, இந்திய குடியுரிமை பெறுபவர்கள், அடுத்த பத்தாண்டுகளுக்கு நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. மேலும், மார்ச் 24, 1971-க்குப் பின்னர் அசாம் மாநிலத்திற்குள் நுழைபவர்கள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் என்று கருதப்படுவார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios