மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறப்பு: டெல்லி அரசுக்குப் பின்னடைவு
டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த விசாரணை திங்கள்கிழமை (ஜூலை 15) நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா 400 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது தொடர்பான டெல்லி அரசின் மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அரசு தரப்பில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் துணைநிலை ஆளுநர் ஒரு சூப்பர் முதல்வர் போல் செயல்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கும் மற்றும் நிலம் ஆகியவற்றைத் தவிர பிற துறைகளில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அதிகாரம் அரசுக்குத்தான் உண்டு என உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மத்திய அரசின் அவசரச் சட்டம் மீறுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3வது முறையாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர, பிற விஷயங்களில் துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
2018ஆம் ஆண்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் துணைநிலை ஆளுநரால் அரசின் முடிவுகள் தொடர்ந்து மீறப்படுகின்றன என்று வாதிட்டது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசின் அதிகாரங்களை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வழங்கியது.
ஒரு பியூனை நியமிக்கவோ, ஒரு அதிகாரியை மாற்றவோ முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி புகார் கூறிவருகிறார். அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்டு 2 முதல் தினசரி விசாரணை