வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற விறுவிறுப்பான விவாதங்களுக்குப் பிறகு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இடைக்கால உத்தரவை ஒத்திவைத்துள்ளது.
வழக்கு விசாரணை இந்த வழக்கு கடந்த மே 20ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவான் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இரண்டாவது நாளாக நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். நேற்று மூன்றாவது நாளாக விசாரணை தொடர்ந்தது.
தலைமை நீதிபதியின் கருத்து விசாரணையின் முடிவில், நீதிபதிகள் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்தனர். அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்ற அனுமானம் உள்ளது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
முக்கிய அம்சங்கள்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் இடைக்கால உத்தரவு முக்கியமாக மூன்று பிரச்சினைகளில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது:
வக்ஃபு சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம், முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம், வக்ஃபு நிலம் பற்றிய கலெக்டர் விசாரணை முடியும் வரை அது வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என்ற சட்டப்பிரிவு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.


