அரசியல்வாதிகள் தேர்தலின் போது,  சாதம், மதம், சமூகம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடம் வாக்குகளை சேகரிப்பது தேர்தல் சட்ட விதிமுறைப்படி சட்டவிரோதமானதாகும் என்று 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அதிரடியாக நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

அடுத்த வாரத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1990ம் ஆண்டு வழக்கு

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்குமாறும் என்.பி.பாட்டீல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 1990-ல் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, கடந்த 1992, ஏப்ரல் 16ந்தேதி, அளித்த தீர்ப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(3)ன் படி ‘மதம்’ என்பதற்கு குறிப்பிட்ட விளக்கம் இல்லை என்று கூறி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

7நீதிபதிகள்

2014-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி இந்த வழக்க விசாரணை செய்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு,  இதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் எனத் தெரிவித்தது.

 அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் லோகூர், பாப்டே, கோயல், லலித், சந்திராசூட்,நகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கி 7 நீதிபதிகள் அமர்வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணையை தொடங்கியது.

ஒத்திவைப்பு

இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பதில்களும் பெறப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

4:3 ஆதரவு

இந்நிலையில், தலைமைநீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான 7 நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில்  தேர்தலின் போது, ‘ சாதி, மதம், இனம், சமூகம், மொழி அடிப்படையில் அரசியல்வாதிகள் மக்களிடம் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது’ என தலைமைநீதிபதி டி.எஸ். தக்கூர், நீதிபதிகள் மதன் பி லோக்கூர், சரத் பாப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு ‘எதிராகவும், சாதி, மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கலாம்’ என நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித், டி.ஓய். சந்திரசுத்ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

சட்டவிரோதமானது

தலைமைநீதிபதி டி.எஸ். தக்கூர், நீதிபதிகள் மதன் பி லோக்கூர், சரத் பாப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(3)ன்படி, அரசியல்வாதிகள் மதம், சாதி, சமூகம், இனம் மற்றும் மொழி அடிப்படையிலும், மதத்தின் அடையாளங்கள், அடையாளங்கள் ஆகியற்றின் மூலம் தேர்தலின் போது மக்களிடம் வாக்குச் சேகரிப்பது சட்டவிரோதமானது.

அரசுக்கு இடமில்லை

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவு என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பமாகும்.  இதில் அரசு தலையிடுவது என்பது தடை செய்யப்படுகிறது. தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படும் ஒருவர் மதச்சார்பற்ற முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் நடைமுறையில் மதத்தின் செயல்பாட்டுக்கு  இடமில்லை. தேர்தல் என்பது மதச்சார்பற்ற நடைமுறையாக இருக்க வேண்டும். அரசு, மதத்தோடு கலப்பது என்பது அரசியலமைப்பு சட்டரீதியாக அனுமதிக்கப்படவில்லை.

ஒருவர் தனது மதத்தை பரப்புவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடைமுறையில் பயன்படுத்த அனுமதியில்லை எனத் தெரிவித்தனர்.

இன்று ஓய்வு...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் இன்று ஓய்வு பெறுகிறார். இந்த வாரத்துக்குள் 5 மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை தலைமைநீதிபதி தாக்கூர் தலைமையிலா அமர்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி முன்வைத்து பிரசாரம் செய்து இந்துக்கள் மத்தியில் பெரிய வாக்குவங்கியை கைப்பற்றலாம் எனத் திட்டமிட்டு இருந்தது. அதற்கு வேட்டு வைக்கும் விதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது அந்த கட்சிக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.