கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார ரீதிக்கு அப்பாற்பட்டு பல்வேறு வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். 

பிழைப்புக்காக தங்கள் மாநிலங்களை விட்டு வெளியேறி வெளிமாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலையில்லாமல், வருவாயை இழந்தனர். வருவாயும் இல்லாமல், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லாமல், குடும்பங்களையும் பிரிந்து கடும் அவதிக்கு உள்ளாகினர். மாநில அரசுகளின் தரப்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அனைவருக்கும் அது போய் சேரவில்லை. 

எனவே பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, சொந்த ஊர்களுக்கு நடையை கட்ட ஆரம்பித்தனர். நான்காம் கட்ட ஊரடங்கு மே 18ம் தேதி தொடங்கிய போது, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால் இரண்டு மாதங்களாக வருமானமே இல்லாமல் இருந்த அவர்களிடம் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. அது அவர்களை கூடுதல் வேதனைக்குள்ளாக்கியது. இதற்கிடையே, சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றவர்கள், ரயில் விபத்தில் உயிரிழந்த அவலங்களும் அரங்கேறின. 

புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல அவலங்களை சந்தித்த நிலையில், இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம், மத்திய, மாநில அரசுகளின் தோல்வியைத்தான் காட்டுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் சரிவர கையாளவில்லை என்று அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட், இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது சுப்ரீம் கோர்ட். 

இதையடுத்து, மத்திய அரசு சார்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. 

அதன்பின்னர், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். அதில், “புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்பும்போது, அவர்களது பயண கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும். எந்தவொரு புலம்பெயர் தொழிலாளரிடமிருந்தும், பயண கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளையும் மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.