உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரியதை அடுத்து அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ல் மூன்று தரப்பினருக்கும் அந்த நிலத்தை சரிசமமாக பிரித்து கொடுத்து உத்தரவிட்டது. 

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பிரிவினருக்கும் சரிசமமாக பிரித்து வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. அந்த நிலம் முழுவதும் தங்களது நிலம் என சன்னி வக்ஃபு வாரியம் ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லீம்கள் உள்பகுதியிலும், இந்துக்கள் வெளிப்பகுதியிலும் வழிபாடு செய்துவந்துள்ளனர்.

அயோத்தி நில உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு இதுதொடர்பாக திட்டம் ஒன்றை வகுத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடிவெடுக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு ஐந்து ஏக்கருக்கு குறையாமல், அயோத்தியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.