ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது
மோடி பெயர் தொடர்பான சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அவர் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக தொடரலாம் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9ஆவது முறையாக நீட்டிப்பு!
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்பதால், இந்த மனு சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்வதாகும் என கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.