அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஒன்பதாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக 8 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 9ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கடையிசாக கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரது நீதிமன்ற காவலை மேலும் 7 நாடகளுக்கு அதாவது அக்டோபர் 20ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் 16 பேராசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்!
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
அதன் தொடர்ச்சியாக, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் இருப்பதால், அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் நவராத்திரி விடுமுறை வர உள்ளதால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு, வருகிற 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.