விளம்பரத்துக்கு எவ்ளோ செலவு பண்றீங்க... நிதி இல்லை என்ற டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
ரேபிட் ரயில் திட்டத்துக்கு நிதி இல்லை என்று கூறிய டெல்லி அரசு, விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவிடுகிறது என்று பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) என்ற ரேபிட் ரயில் திட்டத்திற்கான வழங்க நிதி இல்லை என்று கூறிய டெல்லி அரசை விமர்சித்த உச்ச நீதிமன்றம், டெல்லி அரசு கடந்த மூன்று நிதியாண்டுகளில் விளம்பரங்களுக்காக செலவழித்த நிதி விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவை இணைக்கும் ரேபிட் ரயில் பாதை அமைப்பதற்கான நிதி ஒதுக்குவது தொடர்பான இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மக்கள் நலனுக்காக பெண் முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ மேயர்
அப்போது, நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், அதனால் நிதி உதவி வழங்க இயலவில்லை என்றும் டெல்லி அரசின் வழக்கறிஞர் கூறினார். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிமன்றம் விளம்பரங்களுக்காக நிதி ஒதுக்க முடியும்போது ரேபிட் ரயில் திட்டத்திற்கு அரசிடம் ஏன் நிதி இல்லை என்று கேள்வி எழுப்பியது.
விளம்பரங்களுக்கு பணம் இருந்தால், சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் திட்டத்திற்கு உங்களிடம் ஏன் பணம் இல்லை?" என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இரண்டு வாரங்களுக்குள் நிதி விவரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"நீங்கள் எந்த நிதியை எங்கு செலவழிக்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். விளம்பரத்துக்கான அனைத்து நிதியும் இந்தத் திட்டத்திற்காகத் திருப்பி விடப்படும். உங்களுக்கு இதுபோன்ற உத்தரவு வேண்டுமா? நீங்கள் அதைக் எதிர்பார்க்கிறீர்களா?" என்றும் நீதிமன்றம் டெல்லி அரசை எச்சரித்தது.
தற்போது கட்டப்பட்டு வரும் டெல்லி - மீரட் ரயில் பாதை ரேபிட் ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைப்பதாகும்.
பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி தலைவருக்கு பதவியா? பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து டெல்லி அரசை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, "நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, டெல்லி ரேபிட் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க இயலாது என அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தெரிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கெஜ்ரிவால், கடந்த 5 ஆண்டுகளில், விளம்பரங்களுக்காக 1,868 கோடி செலவிட்டுள்ளார். அதாவது மாதத்திற்கு 31 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1.2 கோடி! சுய விளம்பரத்துக்காக வரி செலுத்துவோரின் பணத்தை வாரி இறைத்தால், வளர்ச்சிப் பணிகளுக்கு எதுவும் இருக்காது!" என்றும் அமித் மால்வியா விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் விடிய விடிய நடந்த சண்டை! 3 பேர் சுட்டுக்கொலை... ஒருவர் தலை துண்டிப்பு