இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கிவிட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில், 8500 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய  வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளன. சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய இடையூறாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தன. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அனைத்து மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன. அரசுகள் உத்தரவிட்டாலும், கள எதார்த்தம் அப்படியில்லை. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அலட்சியமாக தூக்கிப்போடுவது, கொரோனா நோயாளிகள் தரம்கெட்டு நடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. 

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை புதைகுழியில், சுகாதாரத்துறை ஊழியர்கள் தூக்கிப்போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அநியாயங்களை எல்லாம் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து கவனித்துவந்தது உச்சநீதிமன்றம். 

இதற்கிடையே, முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஷ்வினி குமார், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தில், மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில், கொரோனா நோயாளி, படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருந்த சம்பவத்தையும் புதுச்சேரி சம்பவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதையடுத்து இதுகுறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள். கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை தொட்டியில் போடப்பட்டிருக்கிறது. கொரோனாவால் இறந்துபோனவர்களின் உடல்களை முறைப்படி அடக்கம் செய்ய யாருமே இல்லாத அவலநிலை உள்ளது. டெல்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில், கொரோனாவால் இறந்தவரின் உடல், மருத்துவமனையில் காத்திருப்பு பகுதியில் இருந்திருக்கிறது. கொரோனா நோயாளிகளின் நிலை டெல்லியில் படுமோசமாக இருக்கிறது. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை. இதுகுறித்து டெல்லி அரசு பதிலளிக்க வேண்டும். தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளும் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் மும்பையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், டெல்லியில் மட்டும் பரிசோதனைகளை 7000லிருந்து 5000ஆக குறைத்திருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் உட்பட உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் மூன்றாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.