பயிர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க விவசாயிகளுக்கு நிதியுதவி: உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
பயிர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பிற உதவிகளை வழங்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுகாலமாகவே மோசமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது அண்டை மாநிலங்களில் காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, டெல்லியில் விவசாயக் கழிவுகள் எரிப்பு, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு, வாகனங்களின் மிகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், பயிர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பிற உதவிகளை வழங்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. காற்று மாசு பிரச்னையை கையாளும் போது மாநிலங்கள் அரசியலை மறந்துவிட வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேசிய தலைநகரில் மோசமான காற்றின் தரத்திற்கு ஒரு முக்கிய காரணியான பயிர் கழிவுகளை எரிப்பதில் இருந்து ஏழை விவசாயிகளை தடுக்க, இயந்திரங்கள் மற்றும் பிற நிதி உதவிகளுக்கு முழுமையான மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிச., 4ஆம் தேதி வரை நீட்டிப்பு!
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு காற்று மாசுபாட்டைத் தடுக்க மாநிலங்கள் தங்கள் மனதைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. விசாரணையின் போது, பயிர் கழிவுகளை எரித்ததற்காக நில உரிமையாளர்களுக்கு எதிராக 984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், ரூ.2 கோடிக்கு மேல் சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் விதிக்கப்பட்டு, சுமார் ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாம் பரசு தெரிவித்தது.
எளிதான நடவடிக்கையாக பயிர் கழிவுகளை எரிக்கும் சிறு-குறு விவசாயிகள் இந்த விவகாரத்தில் வில்லன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் எனவும், இதனை மாற்ற அவர்களுக்கு உதவி தேவை என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், விவசாயிகளுக்கு பேலர் இயந்திரங்களுக்கு முழுமையான மானியம் வழங்கப் பரிந்துரைத்த நீதிமன்றம், இயந்திர இயக்கச் செலவுகளுக்கான பிற நிதி உதவிகளையும் பரிந்துரைத்ததுடன், விவசாய கழிவுகள் ஒரு பயனுள்ள துணைப் பொருளாக இருக்கலாம். அது மாநில அரசுக்கு விற்கப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தது.
இதற்கு முன்பும் காற்று மாசுபாடு விவகாரத்தில், பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். முன்னரே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்படாதது ஏன்? என பஞ்சாப், ஹரியானா, டெல்லி அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கழிவுகளை யாரும் எரிக்காமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.