புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு மார்ச் 15இல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
புதிய சட்டத்தின் மூலம் புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் ஆணையர் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.
தற்போது, அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 15ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அன்றைய தினமே இந்த வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி? விரைவில் அறிவிப்பு!
புதிய சட்டத்தின்படி, பிரதமர், பிரதமர் நியமிக்கும் அமைச்சர், மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் மூன்று உறுப்பினர் குழுவில் முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இருந்தார். ஆனால், தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு புதிதாக சட்டம் இயற்றியது. அதன்படி, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருப்பர்.
இந்த நடைமுறையின்படி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இதையடுத்து, பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவானது பரிந்துரை செய்யப்பட்ட 5 பேரில் இருவரது பெயரை இறுதி செய்யும். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.