மனிதர்கள் கண்ணியமாக உயிரிழக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே தீராத நோயுடையவர்களை கருணைக்கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தீர்க்க முடியாத நோயுடையவர்கள், செயற்கை உயிர்காக்கும் கருவி மூலமாக மட்டுமே உயிர் வாழுவதை தடுத்து அவர்கள் கண்ணியமான முறையில் உயிரிழக்க ஏதுவாக கருணைக்கொலையை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது. கருணைக்கொலை செய்வது தற்கொலைக்கு சமமானது. அதனால் அதை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது.

ஆனால், மருத்துவ உதவி இல்லாமல் இனி வாழ முடியாது என்ற நிலையில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஒரு நபருக்கு சிகிச்சை அளிப்பது கொடுமையானது. அத்தகைய சிகிச்சையில் செயற்கை உபகரணங்கள் மூலம் அவர்கள் சுவாசிப்பதும், உணவு உட்கொள்வதும் அதிக துன்பம் அளிப்பதாகும் என பொதுநல மனுவை தாக்கல் செய்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், மருத்துவ உதவி இல்லாமல் வாழ முடியாமல் தவிப்பவர்களை கருணைக்கொலை செய்யலாம். கண்ணியமாக இறக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அந்தவகையில், தீராத நோயுடையவர்களை கருணைக்கொலை செய்யலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் வகுத்து கொடுத்துள்ளது.