சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் தலைமைக் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம்கோர்ட் வளாகத்தில் இன்று காலை முதல் ஏராளமான வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு வந்தனர். புத்தாண்டில் முதல்நாளான இன்று, அனைத்து பணிகளும் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்த்து.

இந்நிலையில், இன்று காலை பணியில் இருந்த தலைமை காவலர் சந்த்பால் என்பவர், திடீரென அவரிடம் இருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

சுப்ரீம் கோர்ட் சுற்றி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பதறியடித்து கொண்டு அங்கு சென்றனர். அப்போது, சந்த்பால், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிகாரிகளின் டார்ச்சரால் சந்த்பால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.