ஒன்றிய அரசு கல்வி நிறுவன தேர்வுகளில் இந்தி கட்டாயம்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிட தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடம் தொடர்பான உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Su venkatesan mp condemns Hindi is a compulsory subject in non teaching staff exam

இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடிய, ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிட தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடம் தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) 17.08.2023 அன்று வெளியிட்டுள்ளது.

ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ டி கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது.

சந்திரயான்-3: லேண்டரின் வருகைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!

அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் இது. மேலும் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். மேலும் இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது. 

அலுவல் மொழி விதிகள் 1974, மாநிலங்களை 3 பகுதிகளாக பிரித்து இருப்பதும், தமிழ்நாட்டிற்கு ஒட்டு மொத்தமாக விதி விலக்கு தந்திருப்பதும் கூட தேசிய தேர்வு முகமையால் புறம் தள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல. வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios