நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை, அரசு பள்ளி ஒன்றில் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலட்சியமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி பகுதி, மதகடிப்பட்டு பகுதியை அடுத்துள்ளது பி.எஸ்.பாளையம். இந்த பகுதியில் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்லப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு 10 வயதில் வேல்முருகன் என்ற மகன் உள்ளார். 

வேல்முருகன் அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல், வேல்முருகன் பள்ளி சென்றுள்ளான். ஆனால், மாலையில் அவன் வீடு திரும்பவில்லை. மகன் வராததை கண்ட பெற்றோர், பள்ளி சென்றுள்ளனர். ஆனால் பள்ளி பூட்டப்பட்டிருந்ததால், வேறு இடங்களில் தங்கள் மகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், பள்ளியில் இருந்து, அண்ணா... அக்கா.... யாராவது என்னை காப்பாத்துங்க... அப்பா - அம்மா கிட்ட போகணும். வீட்டுக்குப் போகணும் என்ற சிறுவனின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

பள்ளி சாலை வழியாக சென்று கொண்டிருந்தவர்கள், பூட்டப்பட்ட பள்ளியில் இருந்து சிறுவனின் அபயக்குரல் கேட்டு அதிர்ந்து போயினர். பின்னர், பள்ளியின் இரும்பு கேட் மீது ஏறி சத்தம் வந்த திசை சென்று பார்த்தனர். அப்போது அந்த சிறுவன் அழுது கொண்டு, காப்பாத்துங்க... அம்மாகிட்ட போகணும் என்றான். இதையடுத்து, திருபுவனை காவல் நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.

வேல்முருகன், நேற்று மதியவேளையில் காது வலி என்று ஆசிரியரிடம் கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர், கடைசி பெஞ்சில் போய் படுத்துக்கொள் என்று கூறியுள்ளார். மாணவன் அப்படியே தூங்கி விட்டிருந்தான். இதனை கவனிக்காத ஆசிரியரும் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர். தூக்கம் கலைந்து
கண்விழித்து பார்த்த சிறுவன் பயத்தில அழ ஆரம்பித்து விட்டான். ஆசிரியர்களின் கவனக்குறைவால் சிறுவன் ஒருவன் பள்ளியில் வைத்து பூட்டப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.