‘உலக சதுப்பு நில நாளை’யொட்டி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், ஆரவல்லி பல்லுயிர் பூங்காவை இந்தியாவின் முதல் ‘பிற பயனுள்ள பகுதி அடிப்படையிலான பாதுகாப்பு’ இடமாக அறிவித்து பெருமை சேர்த்திருக்கிறது.
குருகிராமில் பயனற்று கிடந்த கல் குவாரி, சுரங்கத்தை ஆரவல்லி பல்லுயிர் பூங்காவாக மாற்றியதன் மூலம் பெருமைமிகு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
காடுகளை ஆக்கிரமித்து, அவற்றை அழித்து வரும் இந்தக் காலகட்டத்தில் சுரங்கப் பள்ளங்களாகவும் கல்குவாரிகளாகவும் கிடந்த நிலத்தை பல்லுயிர் பூங்காவாக மாற்றிக் காட்டியிருக்கிறது 'அயம்குர்கான்’ என்று தொண்டு நிறுவனம். இந்தப் பல்லுயிர் பூங்கா ‘ஆரவல்லி பல்லுயிர் பூங்கா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இன்று இந்தப் பூங்கா உள்ள இடம், 30 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப் பள்ளங்களாக இருந்தன. இந்தப் பகுதியில் குல் குவாரிகளும் கல் உடைக்கும் தொழிற்சாலைகளும் இருந்தன. இந்தப் பகுதியில் கல் குவாரிகளுக்கும் கல் உடைக்கவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 2002-இல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. கைவிடப்பட்ட இந்த சுரங்கம் மற்றும் கல் குவாரி பள்ளங்களில் தண்ணீர் சேருவது, மலைகள் சரிந்து விழுவது அன்றாட காட்சிகளாயின. நாளடைவில், மண் மூடி தரிசு நிலங்களைப் போலவும் இந்த இடம் மாறிபோனது.
மேலும் இந்த இடத்தில் எஞ்சிய பகுதிகளில் சீமைக் கருவே மரங்களும் முளைத்து, புதர் காடு போல காட்சியளித்தது. இந்த இடத்தை மாற்றும் முயற்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 'அயம்குர்கான்' என அழைக்கப்பட்ட தொண்டு நிறுவனம் களமிறங்கியது. சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள் பலரும் இதில் கைகோர்த்தனர். இவர்களோடு அர்ப்பணிப்புள்ளவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளைச் செய்தனர். சேதமடைந்த நிலத்தை மீட்டெடுக்கச் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பயிற்சியாளர் விஜய் தசமனாவும் களமிறங்கினார். அதன்பிறகு இப்பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள வன தாவரங்களை இங்கே வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள மங்கர், நஹர்கர், கும்பல்கர் ஆகிய இடங்களில் உள்ள இயற்கை காடுகள், தாவரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளிலிருந்து சுமார் 200 பூர்வீக தாவர இனங்களின் நாற்றுகள் இங்கே வளர்க்கப்பட்டன. சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தாவரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டன. சொட்டு நீர்ப் பாசனம் மூலம் அவற்றுக்கு தன்னீர் பாய்ச்சப்பட்டு இத்தாவரங்கள் பராமரிகப்பட்டன. கடுமையான உழைப்புக்குப் பிறகு ‘ஆரவல்லி பல்லுயிர் பூங்கா’ தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த இடமே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒரு அழகான வன பூமியாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் ஆரவல்லி பல்லுயிர் பூங்கா இந்த இடத்தை தொடர்ந்து பராமரித்து வருகிறது. பழைய சுரங்க தளத்துக்கு அருகே பச்சைபசேல் புல்வெளிகள், குளம், பல்வேறு வாழ்விடங்களை இந்தப் பூங்கா நிர்வாகம் பராமரிக்கிறது. தற்போது 160க்கும் மேற்பட்ட பூர்வீக தாவர இனங்கள் பூங்காவில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப் பல்லுயிர் பூங்கா குருகிராம் நகருக்கு மத்தியில் அடர்ந்த காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் ‘உலக சதுப்பு நில நாளை’யொட்டி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், ஆரவல்லி பல்லுயிர் பூங்காவை இந்தியாவின் முதல் ‘பிற பயனுள்ள பகுதி அடிப்படையிலான பாதுகாப்பு’ (“other effective area-based conservation measures -OECM) இடமாக அறிவித்து பெருமை சேர்த்திருக்கிறது. பயனற்ற இடமாக இருந்த இடத்தை பல்லுயிர் பூங்காவாக மாற்றிய அனைவருக்கும் இந்தப் பெருமையில் பங்குண்டு. இந்த பெருமைமிகு அந்தஸ்து கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கு ராயல் சல்யூட்!
