உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்கியுள்ளது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துவிட்ட போதிலும், மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு மிக மிக மிகக்குறைவு.

அதற்கு இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுதான் காரணம். இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தரமான சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. 

ஏற்கனவே ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் அமல்படுத்திய ஊரடங்கிற்குள், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உறுதி செய்த உள்துறை இணை செயலாளர் லால் அகர்வால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், சமூக தொற்றாக பரவவில்லை என்பதை உறுதி செய்தார்.

இதுகுறித்து பேசிய லால் அகர்வால், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லையென்றால் இந்நேரம் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 1654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை. அதேபோல குணமடைவோரின் எண்ணிக்கை 20.57% அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை என்று லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குணமடைவோரின் எண்ணிக்கை சுமார் 21% அதிகரித்திருப்பது, இந்தியா கொரோனாவிலிருந்து வேகமாக மீண்டுவருவதை உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் 1683 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் நேற்றுவரை 752 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பு அதிகமாகவுள்ள மகாராஷ்டிராவில் 840 பேரும் கேரளாவில் 300க்கும் அதிகமானோரும் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.