Station Manager Suspended After Hema Malini Escapes Bull Attack
காளை ஒன்று முட்ட வந்து, அதில் இருந்து தப்பித்தார் நடிகையும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி. இந்நிலையில், இந்தச் சம்பவம் நடந்த ரயில்வே நிலைய மேலாளர் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் மதுரா தொகுதியைச் சேர்ந்த பாஜக., எம்.பி. ஹேமமாலினி இரு தினங்களுக்கு முன்னர், மதுரா ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வந்தார். அப்போது ரயில் நிலையத்தில் இருந்த காளை ஒன்று, ஹேமமாலினி இருக்கும் இடத்தைத் தேடி வந்து, அவரைத் தாக்க முயன்றது. அப்போது உடன் இருந்த பாஜக.,வினர் காளையை விரட்ட முயன்றனர். ஆனால், அதையும் மீறி வந்தது காளை. அப்போது, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். எனவே அவர் காளையின் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார்.
இந்நிலையில் ரயில்வே நடைமேடையில் காளையை விட்டதற்காகவும், அதனை தடுக்காமல் இருந்ததற்காகவும் ரயில்வே நிலைய மேலாளர் கேஎல்.மீனா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வடக்கு மத்திய ரயில்வே மண்டல வர்த்தக மேலாளர் சஞ்சித் தியாகி கூறியுள்ளார்.
ரயில்வே நிலைய மேலாளராக, கே.எல். மீனாவுக்கு பதிலாக பி.எல். மீனா, மதுரா ஜங்ஷன் நிலைய மேலாளர் பொறுப்பினை வகிப்பார் என்று தியாகி கூறியுள்ளார்.
