தெலுங்கானாவில் பட்டப்பகலில் ஒருதலைக்காதலால் நடுரோட்டில் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாகர் ராவ். இவரது மகள் ரவளி தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில் சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் என்பவரும் இதே கல்லூரியில் படித்து வருகிறார். அவினாஷ் என்ற இளைஞர் ரவளியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இதனை ஏற்க ரவளி மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது அவினாஷ் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். மேலும் தனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டார். 

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தனது தோழிகளுடன் ரவளி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவினாஷ் ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு வாக்குவாத் செய்தார். 

ஆனால் ரவளி காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அவினாஷ் தான் கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார். இதை தடுக்க சென்ற தோழிகள் மீதும் பெட்ரோலை ஊற்றிவிடுவதாக மிரட்டினார். இதனையடுத்து ரவளி மீது தீ வைத்துவிட்டு அவினாஷ் அங்கிருந்து தப்பித்தார். பலத்த தீக்காயமடைந்த ரவுளியை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து அவினாஷை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலிக்கவில்லை என்றால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்வது, தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.