மகாராஷ்டிராவுக்கு அடுத்து பீகாரா? ஹிண்ட் கொடுத்த பாஜக!
பீகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த பலர் நிதிஷ்குமார் மீது அதிருப்தியில் இருப்பதாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் பெயரிலேயே செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால், கட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் இறங்கியுள்ளார்.
முன்னதாக, சிவசேனாவிலும் இதுபோன்ற பிளவு ஏற்பட்டது. சிவசேனா பிளவின் போதும் சரி, தேசியவாத காங்கிரஸ் பிளவின் போதும் சரி அதற்கு பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் பீகார் மாநில பாஜக உற்சாகமடைந்துள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா போன்றதொரு நிலையை பீகாரில் ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது.
பாஜக மூத்த தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, நிதிஷ்குமார் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஏராளமான ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐக்கிய ஜனதாதள கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பாஜக மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதால் அக்கட்சிக்குள் கிளர்ச்சி வெடிப்பதற்கான வலுவான சூழல் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
“நிதிஷ்குமாருக்கு அடுத்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் தலைமையை பெரும்பாலான ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் விரும்பவில்லை. ஐக்கிய ஜனதாதள முன்னெடுப்பில் உருவாகும் எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி இருப்பதையும் அவர்கள் விரும்பவில்லை.” என்று சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்க மாட்டோம்; தன்னை நம்பமுடியாத நபர் என்று அவர் நிரூபித்துள்ளார் எனவும் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா போன்றதொரு நிலை பீகாரில் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஐக்கிய ஜனதாதள கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளதாகவும், வரும் நாட்களில் எதுவும் சாத்தியம் எனவும் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம்: ரயில்வே ஆணையம் அறிக்கை
அதேசமயம், சுஷில் குமார் மோடி பகல் கனவு காண்பதாக, ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய தலைவரும், எம்பியுமான லாலன் சிங் தெரிவித்துள்ளார். “சுஷில் குமார் மோடி மிகவும் மனச் சோர்வடைந்துள்ளார், அவர் கட்சியில் தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இதுபோன்று பேசி வருகிறார். பீகார் முதல்வருக்கு எதிராக இதுபோன்று பேசுவதன் மூலம் தனது கட்சித் தலைமையை அவர் திருப்திப்படுத்தப் பார்க்கிறார்.” என லாலன் சிங் தெரிவித்துள்ளார்.
சரத் பவாருக்கு நடந்தது போல், பீகாரில் நடக்க விட மாட்டோம் என ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். சரத் பவாருக்கு தனது ஆதரவை தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், “சரத் பவார் ஒரு வலிமையான தலைவர். பிளவுகள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. மகாரஷ்டிராவில் நடந்து போல பீகாரில் நடக்க விட மாட்டோம்.” என லாலு பிரசாத் யாதவ் உறுதியாத தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பீகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மெகா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியபோதும், கூட்டணியில் இருந்த கட்சிகள் மிகவும் சொற்பமான இடங்களை பெற்றதால் தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு நூலிழையில் தவறியது.
இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வரானார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், பாஜகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதும்கூட, நிதிஷ்குமார் முதல்வரானார். தொடர்ந்து, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால், ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமார், அம்மாநிலத்தின் முதல்வராக தொடர்கிறார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.