ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம்: ரயில்வே ஆணையம் அறிக்கை
பஹானாகா பஜார் ரயில் நிலைய மாஸ்டர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் சிக்னலை சரிசெய்து விபத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை நோக்கி வந்த கொல்கத்தா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறிச் சென்றதில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டது. அடுத்த வந்த ஹவுரோ எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கெனவே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் பேருக்கும் மேல் காயம் அடைந்தனர். இது இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தது.
பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!
கடந்த வாரம் இந்த விபத்து தொடர்பாக ஐந்து ரயில்வே உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியே விசாரணையைத் தொடங்கின. ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணையை முடித்து அறிக்கை அளித்துள்ளது. அதில், ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பல குறைபாடுகள் இருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பாதுகாப்புக்காக சில வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த பஹானாகா பஜார் ரயில் நிலைய மாஸ்டர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் சிக்னலை சரிசெய்து விபத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
விபத்து நடந்த பகுதியில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்றபோது அங்கீகரிக்கப்பட்ட சர்க்யூட் வரைபடம் வழங்கப்படவில்லை எனவும் தண்டவாளங்களில் செய்த மாற்றங்கள் சென்ட்ரல் சர்க்யூட் வரைபடத்தில் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் பஹானாகா பஜார் ரயில் நிலையம் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுதான் தவறான சிக்னல் கொடுக்க வழிவகுத்துவிட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.