பிரதமர் மோடி தலைமையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் ஆன்லைனில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உருவாக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு முதல் இந்தியா இந்த அமைப்பில் ஒரு பார்வையாளராக இடம்பெற்றது. பின்னர், 2017ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டன.
இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை ஏற்கின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு தலைமை ஏற்றது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று காணொலி வாயிலாக நடக்கிறது.
இந்த மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ரஷ்யா சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் சார்பாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
ரஷ்யாவில் வாக்னர் தனியார் ராணுவ குழுவினரின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்பு, புதின் இந்த மாநாட்டில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கெடுக்கிறார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்தியா அமெரிக்காவுடன் பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சூழலில் இந்திய - சீன தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, இந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர ஈரான் நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. போன்ற அமைப்புகளும் இந்த அமைப்பில் இணையுமாறு கோரப்பட்டுள்ளது.