சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்! செப்டம்பரில் பிரதமர் மோடி வெளியிட இருக்கும் சர்ப்ரைஸ் என்ன?
செப்டம்பரில் நடக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் “ஒரு நாடு, ஒரே தேர்தல்” பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் ஒரு நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொண்டுவரப்பட இருக்கும் சட்டமசோதா, மாநில சட்டப்பேரவைலகளுக்கும் மற்றும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் நடத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடந்த முடிந்த சில நாட்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், இத்தகவல் வெளிவந்துள்ளது.
செப் 18 முதல் 22 வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
அமிர்த காலத்தை முன்னிட்டு இந்த கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை ட்விட்டரில் தெரிவித்தார்.
"நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும். அமிர்த காலத்தின் மத்தியில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்துவதற்கு காத்திருக்கிறோம்" என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பயனுள்ள விவாதங்களையும் விவாதங்களையும் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகிவரும் நிலையில், சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த மாதம் நடந்து முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் பதில் சொல்லாமல் இருந்ததால், அவரை மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மூன்று நாள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 8ஆம் தேதி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் விமர்சங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். முடிவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.