அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதியாகும்: மகாராஷ்டிர சபாநாயகர் கருத்து!
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதியாகும் என மகாராஷ்டிர மாநில சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார்
சிவசேனா எம்எல்ஏக்களின் தகுதிநீக்க மனுக்களை தீர்ப்பதில் காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டமன்றம், அரசாங்கம், மற்றும் நீதித்துறை ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்றும், ஒவ்வொருவரும் மற்றவரை மதிக்க வேண்டும்; மற்றவர்களின் உரிமைகள் மீறப்படக் கூடாது என்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடப்பதாகவும், அதேசமயம், சட்டமன்ற உறுப்பினரின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகம், நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் அனைத்து பிரிவுகளின் உரிமைகளிலும் நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், அதனால் சிவசேனா எம்எல்ஏக்களின் தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க அவசரம் காட்டவில்லை என்றும் கூறினார்.
அவசர நீதி புதைக்கப்பட்ட நீதியாகும் என்றும் கூறிய சபாநாயகர் ராகுல் நர்வேகர், இயற்கை நீதியின்படி, தகுதிநீக்க விசாரணையின் போது, ஒவ்வொரு தரப்பும், எம்எல்ஏக்களும் தங்கள் வாதத்தை முன்வைக்க போதுமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
திருவண்ணாமலை சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
“உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை பெற்றுள்ளேன். அதன் மீதான சட்டக் கருத்தைக் கேட்டுள்ளேன். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனுக்களை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் எங்கும் குறிப்பிடவில்லை. தீர்ப்பில் என்ன இருந்தாலும் அது பின்பற்றப்படும். நான் நீதித்துறையை மதிக்கிறேன்.” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சபாநாயகராக நடந்துகொண்டது குறித்து எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது என்பது குறித்து தாம் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். “அரசியலமைப்புச் சட்டங்கள் வகுத்துள்ள விதிகளைப் பின்பற்றவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மூன்று தூன்களுக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. யாரும் ஒருவரையொருவர் மீறக்கூடாது. எந்தவொரு தீர்ப்பு அல்லது உத்தரவையும் நிறைவேற்றும் போது சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.