திருவண்ணாமலை சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில், பெங்களூரு நோக்கி சென்ற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேசமயம், எதிர்புறத்தில் திருவண்ணாமலையை நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குழந்தைகல் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அருகே இன்று காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளா கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள் - மஞ்சள் எச்சரிக்கை!
இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.