கேரள மாநிலத்தில் நடப்பு பருவத்தில் தென் மேற்கு பருவமழை 29.1 சதவீதம் பற்றாக்குறையாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, நீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைக் கூட்டதொடரில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் விதி 300-ன்கீழ் அறிக்கை வௌியிட்டார். அதில் அவர் கூறியதாவது-

கேரள மாநிலத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் 16ந்தேதி வரையில், நடப்பு சீசனில் தென் மேற்கு பருவமழை 29 சதவீதம் பற்றாக்குறையாகப் பெய்துள்ளது. இந்த பற்றாக்குறை மழை காரணமாக மாநிலத்தில் மின் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படலாம்.

இடுக்கி மாவட்டத்தில் 36 சதவீதம், வயநாடு பகுதியில் 59 சதவீதம், திருவனந்தபுரம் பகுதியில் 35 சதவீதம் மழை  பற்றாக்குறையாகப் பெய்துள்ளது.

இந்த பகுதியில்தான் மிகப்பெரிய நீர்மின் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீர் மின்திட்டங்களில் உள்ள நீர் இருப்பு 36 சதவீதம் மட்டுமே இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் மழை பொழிவு 20 முதல் 30 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் போதுமான மழையை மாநிலத்தில் இல்லாவிட்டால், பல சிக்கல்கள் எழலாம்.

கடந்த 7 ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையிலும் சராசரிக்கும் குறைவாகவே மழை பொழிவு இருந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு வலுவிழந்து இருக்கிறது. உலகவெப்பமயதலால் ஏற்பட்ட தாக்கமே மாநிலத்தில் மழை பொழிவை பாதித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஹரிதா கேரளம் திட்டத்தின் ஒருபகுதியாக 15 ஆயிரத்து 022 நீர் நிலைகள் மறு சீரமைக்கப்பட்டு, 3ஆயிரதது 931 பொதுக்கிணறுகள் சீரமைக்கப்படும். 3 ஆயிரத்து 855 புதிய குளங்கள் உருவாக்கப்படும், 13 ஆயிரதது 247 குளங்கள் தூர்வாரப்பட்டு  பராமரிக்கப்படும்.

இந்த வறட்சி சூழலை சமாளிக்க ஏற்கனவே 3 படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3 படைகள், மழை நீர் சேகரிப்பு திட்டங்களை மேற்பார்வையிட்டு, ‘மழைபொழிமா’ என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.