ஷாருக்கான் ரசிகர்களை கவரத்தான் இந்த லடாக் பயணமா?.. ராகுல் பைக் ரைட் - இணையத்தில் எழுந்த வார்த்தை போர்!
தனது தந்தையும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி பைக்கில் சென்றுள்ளார். தற்போது அவர் சென்ற இந்த ரைட் இணையத்தில் வார்த்தை போர் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மிகவும் பிடித்த இடமான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி பைக்கில் சென்றதைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே சமூக ஊடகங்களில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ராகுல் காந்தியின் பைக் சவாரியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இது ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜே-கே என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக்கிற்கு ராகுல் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மோடி ஆட்சிக்கு முன்னும், பின்னும் ஏற்பட்ட வளர்ச்சியை ஒப்பிட்டு பாஜக சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது. அதில் "நரேந்திர மோடி அரசால் கட்டப்பட்ட லடாக்கின் சிறந்த சாலைகளை ப்ரமோட் செய்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்னதாக வெளியிடப்பட்ட வீடியோவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுகிறது என்றும், இந்திய தேசிய கோடி அழகாக அங்கு பறக்கிறது என்றும் கூறப்பட்டது.
ராகுல் காந்தியின் லடாக் பயணம், அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் மோடி வரை இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி கூறுகிறது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா தெரிவித்திருந்தார். மேலும் சட்டப்பிரிவு 370க்குப் பிந்தைய லே மற்றும் லடாக்கில் நடந்த முன்னேற்றங்களைப் பற்றி மக்களிடம் பரப்புவதற்காக வயண்ட் எம்.பி., இந்த பயணம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ராகுல் பயணம் மேற்கொண்ட அதே பகுதியில் திரைப்படம் ஒன்றில் ஷாருக்கான் பைக் ஓட்டியதாகக் கூறப்படும் கிளிப் ஒன்றை பகிர்ந்து, பாஜகவுக்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அதில், லே லடாக்கின் சாலைகள் கடந்த 2011ம் ஆண்டிலும் அப்படியே இருந்தன - இந்த காட்சி யாஷ் சோப்ராவின் 'ஜப் தக் ஹை ஜான்' படத்தில் படமாக்கப்பட்டது. என்று கூறி பதிவிடப்பட்டுள்ளது.
அப்படி என்றால் ஷாருக்கான் ரசிகர்களை கவரதத்தான் இந்த லடாக் பயணமா என்று இணையவாசிகள் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு நாள் பயணமாக லடாக் சென்ற ராகுலின் பயணம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான இந்த இணைய சண்டையும் தொடர்ந்து வருகின்றது.