சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் முதல்கட்டமாக ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தன்னிறைவு இந்தியா பொருளாதார சிறப்பு திட்டங்களின் இரண்டாம் அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறு விவசாயிகள் தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் போன்றோருக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 3 திட்டங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், ஒன்று தெருவோர தொழிலாளர்களுக்காகவும், 2 திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கும் உள்ளது. விவசாயிகளுக்கு இன்னும் பல திட்டங்கள் இனி வரும் நாட்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது. 

கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கார்டுகள் வழங்கி ரூ.25 ஆயிரம் கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது. 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 3 கோடி விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து 3 மாத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச்-1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86600 கோடி மதிப்பில் 63 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், 12,000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முக கவசங்கள் மற்றும்  1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார்.