நிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கொண்டாடும் என்று முன்பு பா.ஜனதா கட்சி கூறியதே, இப்போது பாகிஸ்தான் கொண்டாடுவதற்காகவா நிதிஷ் குமாருடன் பாஜனதா கட்சி சேர்ந்துள்ளது என்று சிவ சேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜனதா கட்சி கூட்டணியில் சிவ சேனா கட்சி இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது பா.ஜனதாவின் தவறுகளை அந்தகட்சி துணிச்சலுடன் சுட்டிக்காட்டி வருகிறது. பீகாரில் நிதிஷ் குமாருடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ வில்  தலையங்கம் எழுதியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் பிரிந்து பிரதமர் மோடிக்கு கடும் எதிர்பாளராக செயல்படத் தொடங்கினார். அப்போது, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, ‘தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் கொண்டாடும்’’ என்று தெரிவித்து இருந்தார். இதைச் சுட்டிக்காட்டி தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு முறை, கூறுகையில், நிதிஷ் குமார் தேர்தலில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கொண்டாடும் என்று கூறி இருந்தார். இப்போது பாகிஸ்தான் கொண்டாடுகிறார்களா?. பாகிஸ்தானை மகிழ்ச்சி அடையவைக்க, கொண்டாட வைக்கவே, நிதிஷ் குமாருடன், பா.ஜனதா கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது போலத் தெரிகிறதே.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதன் பழைய நண்பர் மீண்டும் வந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு நிதிஷ் சென்ற பின் அவரிடம் ஏராளமான குப்பை சேர்ந்துவிட்டது. அந்த குப்பை கழிவுகள் இப்போது அகற்றப்பட வேண்டும்.

இன்னும் இரு ஆண்டுகளுக்கு பின்பும், மோடியின் வெற்றி அலை இருக்கும். அதனால், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்துவிட நிதிஷ் குமார் மனசாட்சி கூறியுள்ளது. அரசியலில் ஒருபோதும் ஒழுக்கமும்,கொள்கையும் இருந்தது இல்லை.

கோவாவிலும், மணிப்பூரிலும்  பெரும்பான்மை இல்லாத சூழலிலும் பா.ஜனதா ஆட்சியை அமைத்தது. டெல்லியில் பா.ஜனதா ஆட்சி இல்லாத நிலையில், அந்த மாநிலத்தில் இது சாத்தியமாகுமா? என்பதை பா.ஜனதா தனது மனசாட்சியை கேட்க வேண்டும்.

பசு குண்டர்கள் நடத்தி வரும் வன்முறை குறித்து நிதிஷ் குமார் கருத்து என்ன என்பது குறித்து பா.ஜனதா கட்சி கேட்டு தௌிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். மோடியும், அமித் ஷாவும் அந்த முகத்தை பறித்தனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.