நான் பிறப்பிலேயே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். அதனால், தான் தாய்வீட்டையும், ஆனிவேரையும் தேடி வந்து இருக்கிறேன், யாருடைய தலைமையின் கீழும் பணி செய்ய தயார் என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.
காங்கிரஸில் சேர்ந்தார்
பாரதியஜனதா கட்சியில் இருந்து விலகி முன்னாள் கிரிக்கெட் வீரரும், டி.வி. நடிகரும், வர்ணனையாளருமான நவ் ஜோத்சிங் சித்து நேற்று முன் தினம் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நவ்ஜோத் சிங் சித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தாய்வீடு தேடி
நான் பிறவியிலேயே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். எனது தந்தை பகவந்த் சிங் சித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்தவர். அதனால்,தான் நான் ஆனிவேரைத் தேடியும், தாய்வீட்டைத் தேடியும், இப்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறேன்.
தயக்கம் இல்லை
எனக்கு பஞ்சாப் மாநிலத்தில் யார் தலைமையிலும் பணியாற்றுவதிலும் தயக்கம் கிடையாது. காங்கிரஸ் கட்சி யாரைத் தலைவராக நியமித்து அவருக்கு கீழ் பணியாற்றக் கூறுகிறதோ அவரின் கீழ் பணியாற்றுவேன். கட்சி எந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் போட்டியிடுவேன். என்னுடைய சொந்த விருப்பங்களுக்காக, திட்டங்களுக்காக வரவில்லை. பஞ்சாப்பை மீட்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன் என்றார்.
யார் முதல்வர்?
பஞ்சாப் மாநிலத்தில் யாரை முதல்வராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்த உள்ளது?, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கு, சித்து பதில் அளிக்கையில், “ இந்த கேள்விக்கு இப்போதுள்ள நிலையில் பதில் அளிப்பது தேவையில்லாதது. அவசியம் கிடையாது. அரசியலைப் பொருத்தவரை இருந்தால், அல்லது ஆனால் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது. என் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூறப்போகிறேன். ஆதலால், இப்போதே எதையும் ஊகம் செய்ய கூடாது'' என்றார்.
ராமாயனக் கைகேயி
பாரதியஜனதா கட்சியில் இருந்து வெளியேறியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சித்து பதில் அளிக்கையில், “ ராமாயணத்தில் கைகேயி தனது மகன் பரதனை அரியணையில் ஏற்ற, ராமனை எப்படி காட்டுக்குள் அனுப்பினாரோ. அதேபோல்,பாரதிய ஜனதா எனும் கைகேயி, என்னை அமிர்தசரஸ் நகரில் நுழையவிடாமல், எம்.பி. ஆக்கி உட்காரவைத்துவிட்டது'' என்றார்.
நாங்கள் சேரக்கூடாதா?
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்குடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு சித்து பதில் அளிக்கையில், “ எனக்கும், மாநிலத் தலைவர் அமரீந்தர் சிங்குக்கும் எந்தவிதமான மனக்கசப்பும் கிடையாது. இருநாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சினையை, ஒரு மேஜையில் அமர்ந்து பேசித் தீர்க்கும் போது, இரு நபர்கள் பேசித்தீர்க்க முடியாதா?
லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் ஒன்றாகச் சேரும் போது, நான், ஏன்அமீரிந்தர் சிங்குடன் சேரக்கூடாதா?'' எனத் தெரிவித்தார்
