- Home
- Business
- Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
Smartphone EMI : நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களுக்கான EMI தவணையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உங்கள் சாதனத்தை முடக்க முடியுமா? இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை காண்போம்.

கடனை வசூலிப்பதில் புதிய விதிகள்
கடன் வசூலிக்கும் பெயரில் நிதி நிறுவனங்கள் அத்துமீறல் செய்வதாகவும், சமூக வலைத்தளங்களில் மிரட்டுவதாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்களிடமிருந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
முக்கிய விதிகள்
1. எந்தெந்த சாதனங்களுக்குப் பொருந்தும்?: வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது லேப்டாப்பையோ நிதி நிறுவனங்கள் முடக்க முடியாது. அந்தந்த குறிப்பிட்ட சாதனத்தை வாங்குவதற்காக மட்டுமே கடன் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.
2. எப்போது முடக்கலாம்?: EMI கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் மட்டுமே படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே ஒப்பந்தப்படி முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
3. முடக்கத்தின் போது என்ன செய்யலாம்?: போனை முடக்கினாலும், வரும் அழைப்புகள் மற்றும் செல்லும் அழைப்புகளை தடுக்கக்கூடாது. அதேபோல் SMS மற்றும் அவசரக்கால SOS வசதிகளைத் துண்டிக்க அனுமதி இல்லை.
4. தனியுரிமை பாதுகாப்பு: போனை முடக்கும் போது, பயனரின் தனிப்பட்ட புகைப்படங்கள், தொடர்புகள், குறுஞ்செய்திகள் அல்லது லொகேஷன் ஹிஸ்டரி ஆகியவற்றை நிதி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் பார்க்கவோ அல்லது அணுகவோ கூடாது.
இதையும் படிங்க : Rice Business : IT வேலையை உதறி அரிசி வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!
பிற முக்கிய அம்சங்கள்
- தகுதியுள்ள மென்பொருள்: சாதனத்தை முடக்கப் பயன்படுத்தும் மென்பொருள், அந்த நிறுவனத்தின் (OEM) அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கும் அதிகாரப்பூர்வமான மென்பொருளாக மட்டுமே இருக்க வேண்டும்.
- மீண்டும் திறக்கும் காலக்கெடு: நிலுவைத் தொகையைச் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் சாதனம் அன்லாக் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 250 வீதம் வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்படாத நபர்கள்: கடன் வசூலிக்க வரும் நபர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
நிபுணர்களின் ஆலோசனை
நிதி நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து விவேக் ஐயர் (கிராண்ட் தார்ன்டன் பாரத் நிறுவனத்தின் நிதி சேவைகள் இடர் ஆலோசனைப் பிரிவு பங்குதாரர் மற்றும் தேசியத் தலைவர்) கூறுகையில், "ஜனவரி 1, 2027 முதல், அந்தந்த சாதனத்திற்காகக் கடன்பெற்றிருந்தால் மட்டுமே அதை முடக்க முடியும். இதர கடன்களுக்காக போனை முடக்க முடியாது. கடன் வாங்கும் போதே ஒப்பந்தத்தில் நிபந்தனைகளைச் சரியாக வாசித்துப் பார்க்க வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார்.
அதேபோல், பேங்க் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி அதில் ஷெட்டி கூறுகையில், "இந்த விதிமுறைகள் கடன் வாங்குபவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. அதே வேளையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை பயனர்களுக்கு உண்டு. கடன் வாங்குவதற்கு முன் அதன் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம்," என்றார்.
கடன் முழுவதையும் செலுத்திய பிறகு, நிதி நிறுவனத்திடம் முறையாகத் தகவல் தெரிவித்து, சாதனத்தில் உள்ள முடக்க மென்பொருளை நீக்கிவிட்டதை உறுதி செய்யுமாறு பைசா பஜார் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் அகர்வால் அறிவுறுத்துகிறார்.
இதையும் படிங்க : Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
