பாஜகவில் இருந்து விலகிய சித்து, ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சித்து, 3 முறை அமிர்தசரஸ் பாஜக எம்.பியாக இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தி அடைந்தார்.

இதையடுத்து சித்துவுக்கு, பாஜக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வழங்கியது. ஆனாலும், அவருக்கு அந்த பதவியில் முழு மனதுடன் பணியாற்ற முடியவில்லை. மேலும், பாஜக கூட்டணி அரசுடன், அதிருப்தியான போக்கில் இருந்து வந்தார். பின்னர் திடீரென அவர், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜகாவில் இருந்த விலகிய சித்து, காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மியில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதைதொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர், சித்துவை தங்களது கட்சியில் சேரும்படி பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அவர் எவ்வித பதிலும் கூறாமல் இருந்தார்.

இந் நிலையில் சித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார். அப்போது, ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்து கொண்டார். இத்தொடர்ந்து, பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில் சித்து போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அவர், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார். இதே தொகுதியில், கடந்த தேர்தலின்போது, அவரது மனைவி கவூர் வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சித்துவின் மனைவி கவூர் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். தற்போது சித்துவின் வருகையினால், பஞ்சாப் தேர்தலில் காங்கிரக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ந்தேதி  தேர்தல் நடக்கிறது.