நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி இணைந்து ஆட்சி அமைத்தது. இதனையடுத்து, முதல்வராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்சியை கவிழ்க்க கடந்த 14 மாதங்களில் 6 முறை பாஜக முயற்சி செய்தது. ஆனால், அவை பலன் அளிக்காமல் போனது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி கூட்டணி ஆட்சி எவ்வித தடையில்லாமல் நடைபெறுவதற்கு சித்தராமையாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது.

 

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலில் மஜதவும், காங்கிரஸும் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக அமோக வெற்றி பெற்றது. பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் சித்தராமையாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி பாஜகவின் குதிரை பேரத்தில் சாய்ந்துகொண்டிருந்தனர். காங்கிரஸ் தரப்பில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள், மஜத தரப்பில் 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் கடிதம் அளித்தனர். ஆனால், இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகிய இருவரையும் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க சம்மதிக்க வைத்ததோடு, அவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தனது ஆதரவை வாபஸ் பெற்றனர்.  

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு குறித்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதன் முடிவில், குமாரசாமி தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

இதனையடுத்து, பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்தபாடம் புகட்ட வேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. முதல்வராக இருந்தபோது எல்லா சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு பாஜகவுக்கு துணைபோன அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் அரசியலில் மீண்டும் தலைதூக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்று சித்தராமையா ஆவேசமாக கூறியுள்ளார்.