கர்நாடக அரசுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 225 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் இந்தக் கூட்டணிக்கு 120 பேர் ஆதரவு இருந்து வருகிறது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ், ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு, கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவிகளை ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 இதனால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி கவிழுமா? அல்லது மீண்டும் முதல்வராக குமாரசாமி நீடிப்பாரா?, பாஜக ஆட்சியை பிடிக்குமா? என பல்வேறு கேள்வி எழுந்து வருகின்றன. 

இந்நிலையில், கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது. 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் இந்த சதி அரங்கேறுகிறது. கர்நாடக அரசுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இதனிடையே, இதுபோல ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் செயல்படுத்த பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது.