கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ. 2000: முதலமைச்சர் சித்தராமையா அதிரடி!!
கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கிருக லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அதில் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்குவது, பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை அறிவித்து இருந்தது.
இதுகுறித்து இன்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ''இன்று நான் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இருந்தேன். தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்திருந்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளையும் ஆலோசனை செய்தோம். ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நடப்பு நிதியாண்டிலேயே நிறைவேற்ற முடிவு செய்து இருக்கிறோம். வாக்குறுதி கார்டுகளில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கையெழுத்திட்டு இருக்கிறார். அனைத்து வாக்குறுதிகளும் மக்களை சென்றடையும்.
கிருக ஜோதி எனப்படும் இலவச மின்சாரம் என்பது ஆண்டு நுகர்வு மற்றும் வீடு எண்ணிக்கைகளைப் பொறுத்தது. 200 யூனிட்களுக்கு குறைவாக இருந்தால் ஒருவர் மின்கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
கிருக லட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2000 அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும். அவர்களது ஆதார்டு கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப்படும். தொழில்நுட்பம் காரணமாக தற்போது இந்தப் பணியை துவங்க இயலவில்லை. வரும் ஜூன் 15 ஆம் தேதி துவங்கி ஜூலை 15 ஆம் தேதி முடிக்கப்படும். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு பணம் வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும். ஏற்கனவே சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்சன் பெற்று வரும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2000 கூடுதலாக வழங்கப்படும்.
வறுமை கோட்டிற்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கப்படும். இந்த திட்டத்தில் முன்பு நாங்கள் ஏழு கிலோ என்று கொடுத்து வந்தோம். எங்களுக்குப் பின்னர் வந்த பாஜக அரசு ஐந்து கிலோ என்று குறைத்து. இத நாங்கள் தற்போது பத்து கிலோ என்று உயர்த்தி இருக்கிறோம். ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த இலவச அரிசி வழங்கப்படும். யுவ நிதி வாக்குறுதி திட்டத்தின் கீழ் டிகிரி முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 என்று 24 மாதங்களுக்கு வழங்கப்படும். இதில் மூன்றாம் பாளினத்தவர்களும் அடங்குவர்'' என்றார்.
மக்களுக்கு காங்கிரஸ் அளித்திருந்த அந்த ஐந்து வாக்குறுதிகள்:
* கிருக ஜோதி திட்டத்தின் கீழ் வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
* கிருக லட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ. 2000
* அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசம்
* பட்டப்படிப்பு முடித்து ஆறுமாதங்களுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு 24 மாதங்களுக்கு மாதம் ரூ. 3000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். வயது தகுதி 18-25.
* பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்து இருந்தது.
இந்த இலவசங்களை வழங்குவதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதை இலவசம் என்று பார்க்காமல் பெண்களுக்கான அதிகார பகிர்வாக பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.