கர்நாடக முதலமைச்சரின் உத்தரவுபடியே, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தேன் என்று முன்னாள் சிறைத் துறை அதிகாரி சத்யநாராயணராவ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் பெறுவதற்காக 2 கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக, முன்னாள் சிறைத்துறை அதிகாரி ரூபா கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றச்சாட்டுக்களை கூறி, கர்நாடக அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் தனி நபர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு நடத்திய வினய்குமார், ரூபாயின் குற்றச்சாட்டில் பெரும்பகுதி உண்மை என்றும், சிறையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்கிறது. சிறையில் கண்காணிப்பு கேரமாக்கள் சரியாக செய்லபடவில்லை. சிறையில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிறையின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. எனவே சிறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார் வினய்குமார்.

டிஐஜி ரூபாய் குறிப்பிட்டது போல, சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ஊழல் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அது மட்டுமல்லாமட்ல, சத்தியநாராயணராவும், ரூபாயும் தங்கள் பணி நடத்தை விதிகளை மீறி சிறைத்துறை தகவல்களை வெளியே கசியவிட்டது குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சத்தியநாராயண ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத்துறை தன் மீது தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்யுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிறைத்துறை டிஜிபியாக இருந்தபோது, மற்ற கைதிகளைப் போலவே சசிகலாவை நடத்தினேன். ஏறக்குறைய ஒரு மாதம் சசிகலாவுக்கு சிறையில் எவ்வித வசதியும் வழங்கப்படவில்லை. 

முதலமைச்சர் சித்தராமையா அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். அப்போது, சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கி இருக்கிறீர்கள்? என்று சித்தராமையா கேட்டார். அதற்கு நான், சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளே சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது என்றேன். 

அதற்கு சித்தராமையா, சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய அழுத்தம் வருகிறது. அவருக்கு ஒரு கட்டில், மெத்தை, தலையணை மட்டும் கொடுங்கள் என கூறினார்.முதல்வர் சொன்னதால், நான் சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை வழங்கினேன். வேறு எந்த வசதியும் செய்து தரவில்லை என சத்தியநாராயண ராவ் தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வினய்குமார் அறிக்கை, ஊழல் தடுப்பு துறை போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை வரும் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து புயலைக் கிளப்பும் என்று கூறப்படுகிறது.