காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், பிரியங்கா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்றும், அவர் இந்திரா காந்தியைப் போல வலிமையான தலைவர் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து, ராகுல் காந்தி மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தி இருந்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் உள்ளேயே அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. இது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இந்திரா காந்தி போல பதிலடி கொடுப்பார்"
சஹாரன்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரியங்கா காந்தி குறித்து அதிரடியான கருத்துக்களை முன்வைத்தார்.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரியங்கா காந்தியை பிரதமராக்கிப் பாருங்கள், அவர் தனது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே வங்கதேசத்திற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார். பாகிஸ்தானுக்கு தீராத வடுவை ஏற்படுத்திய இந்திரா காந்தியின் பேத்தி அவர். துணிச்சல் இருந்தால் அவரை பிரதமராக்குங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று!" என சவால் விடுத்தார்.
ராகுல் காந்தி குறித்துக் கேட்டபோது, "ராகுலும் பிரியங்காவும் ஒரு முகத்தின் இரண்டு கண்கள் போன்றவர்கள், அவர்கள் வேறல்ல" எனக்கூறி மழுப்பலாகப் பதிலளித்தார்.
பிரியங்கா காந்தியின் கருத்து
முன்னதாக, வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த பிரியங்கா காந்தி, அண்டை நாட்டில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் பௌத்த சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதுவே தற்போது அவரை 'வலிமையான தலைவர்' என முன்னிறுத்த ஒரு காரணமாக அமைந்துள்ளது.
"குடும்பத்திற்குள்ளேயே போர்"
காங்கிரஸ் எம்.பி-யின் இந்த பேச்சு, அக்கட்சியின் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
"ராகுல் மற்றும் பிரியங்கா ஆதரவாளர்களுக்கு இடையே வெளிப்படையான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் குடும்பத்திற்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது” என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி என விமர்சித்துள்ளார்.
"ராகுல் காந்தி மீது அவரது கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, சொந்தக் குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளுமே நம்பிக்கை இழந்துவிட்டனர். 'ராகுலை நீக்கிவிட்டு பிரியங்காவை கொண்டு வாருங்கள்' என அவர்களே கூறத் தொடங்கிவிட்டனர். இதற்கு பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் மறைமுக ஆதரவு அளிக்கிறார்” என ஷெசாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
ராபர்ட் வதேராவின் விளக்கம்
இது குறித்து ராபர்ட் வதேராவிடம் கேட்டபோது, "பிரியங்கா காந்தி தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது. நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் மக்கள் கேட்கிறார்கள். ஆனால் தற்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்," என்று கூறினார்.


