இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பினார். விண்கலம் கலிஃபோர்னியா கடற்கரை அருகே தரையிறங்கியது, மேலும் சோதனைத் தரவுகளையும் சுமந்து வந்தது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் அவருடன் பயணித்த குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து புறப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3:01 மணியளவில் கலிஃபோர்னியா கடற்கரை அருகே விண்கலம் தரையிறங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட ஆக்ஸியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற டிராகன் விண்கலம், கலிபோர்னியா கடற்கரையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:01 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் வெற்றிகரமாக நுழைந்ததை ஸ்பேஸ்எக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அறிவித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், "டிராகன் விண்கலம் ஸ்பிளாஷ் டவுன் உறுதி செய்யப்பட்டது - பூமிக்கு மீண்டும் வரவேற்கிறோம்," என்று கூறியுள்ளது.
விண்கலம் பசிபிக் பெருங்கடலில் இறங்கியவுடன், மீட்புக் குழுக்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரையும் வெளியே அழைத்து வருவார்கள். அதன் பிறகு, விண்வெளி வீரர்கள் 4 பேரும் சுமார் ஏழு நாட்களுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் இருப்பார்கள். அவர்களின் உடல் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப மாற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
விண்கலத்திலிருந்து முதலில் வெளியே வந்தவர் அமெரிக்க விண்வெளி வீரர் விட்சன். அவருக்குப் பிறகு சுபான்ஷு சுக்லா வெளியேறினார். மூன்றாவதாக போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கியும், நான்காவதாக ஹங்கேரியின் திபோர் கபுவும் டிராகன் விண்கலத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
டிராகன் விண்கலத்தின் பூமிக்குத் திரும்பும் பயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுக்லாவும் அவரது சக விண்வெளி வீரர்களும் விண்கலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தவுடன், விண்கலத்தின் கதவு மூடப்பட்டு, அழுத்தம் குறைக்கும் செயல்முறை (depressurisation process) தொடங்கப்பட்டது. ஒரு மணிநேரம் நீடித்த இந்த செயல்முறைக்குப் பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா நிறுவனங்களின் இறுதி ஒப்புதலுடன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணியளவில் இதற்கான கட்டளை வழங்கப்பட்டவுடன், டிராகன் விண்கலத்திற்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் இடையிலான தரவு இணைப்புகள் விடுவிக்கப்பட்டு, டிராகன் விண்கலம் தனது பிடிப்பு கொக்கியைத் துண்டித்தது. இந்த செயல்முறைக்கு சுமார் நான்கு நிமிடங்கள் ஆனது. இதைத் தொடர்ந்து, டிராகன் தனது உந்துவிசைகளை (thrusters) இயக்கி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிச் சென்றது.
ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக மாலை 4:35 மணிக்கு (இந்திய நேரம்) துண்டிக்கப்பட்டனர். சுமார் 22.5 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
ஆக்சியம்-4 பயணத்தின் தரவுகள்
நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், டிராகன் விண்கலம் 580 பவுண்டுகளுக்கும் அதிகமான பொருட்களை சுமந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாசாவின் உபகரணங்கள் மற்றும் விண்வெளி திட்டத்தின்போது நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தரவுகளும் அடங்கும்.
சுபான்ஷு சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அவரது பாதுகாப்பான திரும்புதல் நாடு முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
