shiv sena condemns modi send gau rakshaks to fight terrorists kashmir
காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ள சிவசேனா கட்சி, “ பசு பாதுகாவலர்களை அனுப்பி தீவிரவாதிகளுடன் சண்டை போட அனுப்புங்கள்” என்று பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமர்நாத் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிய பக்தர்கள் மீது கடந்த 3 நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பயணிகள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர். இதில் 4 பயணிகள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மஹாராஷ்டிராவைச் சேர்்ந்தவர்கள்.
தீவிரவாதிகளின் இந்த காட்டுமிராண்டி தாக்குதலுக்கு மோடி தலைமயைிலான மத்திய அரசு எந்தவிதமான பதிலடியும் கொடுக்காமல் டுவிட்டரில் மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான “சாம்னா”வில் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-
காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் சென்று திரும்பிய இந்து பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இது குறித்து டுவிட்டரில் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் 56 இன்ஞ்ச் மார்பு இருக்கிறது என்று மோடி பேசினாரே, இப்போது பாகிஸ்தானை எதிர்க்க 56 இன்ஞ்ச் மார்பு தேவைப்படுகிறது.
மனிதநேயமில்லாமல் நடக்கும் இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த யாருக்காவது துணிச்சல் இருக்கிறது? தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான மக்களுக்காக அஞ்சலி செலுத்திக் கொண்டும், காகிதத்தில் கண்டனம் தெரிவித்துக் கொண்டு மட்டும் இருந்தால், எப்படி தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடப் போகிறீர்கள்?.
காஷ்மீரில் அரசு நிர்வாகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் அசாதாரண சூழல் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக இருக்கிறது. காஷ்மீரில் அரசு எந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை. தீவிரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம், வன்முறைதான் மாநிலத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. அந்த மாநிலத்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு 56இன்ஞ்ச் மார்பு அவசியம் தேவை.
தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கை செய்தி கொடுத்து, 370-வது பிரிவு சிறப்புச் சட்டத்தை ஒரு வாரத்துக்குள் ரத்து செய்ய வேண்டும். உலகுக்கு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உணர்த்த வேண்டும்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு விளையாட்டு, கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலோடு கலக்காதீர்கள் என்கிறது. ஆனால், மதமும், தீவிரவாதமும் இணைந்துதானே அமர்நாத் தாக்குதலாக வந்து இருக்கிறது. தீவிரவாதிகளின் பைகளில் ஆயுதங்களுக்கு பதிலாக, மாட்டிறைச்சி வைத்து இருந்தால், ஒருவேளை அவர் உயிரோடு திரும்பி இருக்கமாட்டார்களோ? என்று யோசிக்கத் தோன்றுகிறது. இன்றைய சூழலில் பசு பாதுகாவலர்கள் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. அவர்களை ஏன் காஷ்மீருக்கு அனுப்பி, தீவிரவாதிகளுடன் சண்டையிட அனுப்பக்கூடாது.
அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த நாட்டின் மீதான தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும். இந்த தாக்குதலுக்கு சாதாரணமாக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது, தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய நேரம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
