shiv sena condemns cow vigilants

நாடுமுழுவதும் பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் பசு குண்டர்கள் நடத்தி வரும் தாக்குதல் வேதனை அளிக்கிறது, மனிதர்களைக் காட்டிலும், நாட்டில் மாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று சிவசேனா கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆளும் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து பசு குண்டர்கள் நாட்டின் சில மாநிலங்களில் நடத்தும் தாக்குதலால் பிரதமர் மோடியும் சிக்கலைச் சந்தித்துள்ளார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் நமது நாட்டை துண்டாட முயற்சிக்கிறது.

மாட்டிறைச்சி வைத்து இருப்பதாகக் கூறி நாடுமுழுவதும் உள்ள முஸ்லிம்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதே நேரத்தில் எல்லையிலும் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் தொந்தரவு தருகிறார்கள், உள்நாட்டிலும் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படும்போது, நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட பசு குண்டர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது, இந்த பசு குண்டர்கள் எங்கு சென்றார்கள்?. காஷ்மீர் சென்று பழிக்குபழி வாங்க, ஆயுதங்கள் ஏதும் கொண்டு செல்வதில் பசு குண்டர்களுக்கு சிக்கல் இருக்கிறதா?.

பசு குண்டர்கள் தங்களது வீரத்தையும், துணிச்சலையும் அனைத்து இடங்களிலும்வௌிப்படுத்த வேண்டும். மதத்தின் அடிப்படையில் பசு பாதுகாக்கப்பட்டால், மதத்தின் அடிப்படையில் தேசமும் பாதுகாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடியின் பாதையில் பசு குண்டர்கள் முட்களை வீசுகிறார்கள்.

பிரதமர் மோடி உத்தரவிட்ட பின்பும், பசு குண்டர்கள் தங்களின் செயலை நிறுத்தாமல் இருக்கிறார்கள். 40முதல் 50 பேர் கொல்லப்பட்ட பின்பும், சட்டம் அமைதியான பார்வையாளராக இருந்து வருகிறது.

இந்த நாட்டில் மனிதர்களைக் காட்டிலும், மாடுகளுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து, நாட்டின் கஜானாவுக்கு அதிகமான வருவாயை பெற்றுத்தருகிறது.

அப்படியானால், மாட்டிறைச்சி மூலம் கிடைத்த பணத்தை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று பசு குண்டர்கள் கூறுவார்களா?. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த போலீசார் கூட வீரமரணம் அடைந்து இருக்கிறார்கள். அமர்நாத் பக்தர்களை காப்பாற்றியதும் ஒரு முஸ்லிம்தான்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.