பாட்னாவில் அரசு விழா ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பெண் மருத்துவர் ஒருவரின் பர்தாவை வலுக்கட்டாயமாக நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் ஆதரவாகப் பேசியதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

பாட்னாவில் அரசு அதிகாரி ஒருவரின் பர்தாவை (முகத்திரை) பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வலுக்கட்டாயமாக நீக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்துள்ளது.

முகத்திரையை விலக்கிய நிதிஷ் குமார்

பாட்னாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதலமைச்சர் நிதீஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது, பணி ஆணை பெற வந்த நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் மருத்துவர் பர்தா அணிந்திருந்தார். இதைப் பார்த்த நிதீஷ் குமார், "இது என்ன?" என்று கேட்டவாறே அவரது முகத்திரையைத் தனது கைகளால் கீழே இழுத்துவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நிதீஷ் குமாரின் செயலுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

"இது என்ன இஸ்லாமிய நாடா?"

இந்த விவகாரத்தில் இன்று கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங், நிதீஷ் குமாரின் செயலில் எந்தத் தவறும் இல்லை என்று வாதிட்டார்.

"அரசு பணி ஆணை பெறச் செல்பவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டாமா? பாஸ்போர்ட் எடுக்கும்போதும், விமான நிலையத்திலும் முகத்தைக் காட்டுவதில்லையா? இது என்ன இஸ்லாமிய நாடா? நிதீஷ் குமார் ஒரு பாதுகாவலராகவே (Guardian) நடந்துகொண்டார்," என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பெண் வேலைக்குச் சேர மறுப்பதாக வெளிவரும் தகவல்களுக்குப் பதிலளித்த அவர், "அவர் வேலைக்குச் சேர மறுக்கட்டும் அல்லது நரகத்துக்கே (Go to hell) போகட்டும், அது அவரது விருப்பம்," என்று மிகக் கடுமையாகப் பேசினார்.

எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு

கிரி ராஜ் சிங்கின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"மத்திய அமைச்சரின் பேச்சு ஒரு 'மலிவான மனநிலையை' காட்டுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் மத நம்பிக்கைகளை அவமதிப்பது வெட்கக்கேடானது” என காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பெண்ணின் பர்தாவை வலுக்கட்டாயமாக நீக்குவது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம்." என என்.சி.பி.யின் பௌசியா கான் கூறியுள்ளார்.

"நான் பர்தா முறைக்கு எதிரானவன்தான். ஆனால், ஒரு முதலமைச்சர் பெண்ணின் ஆடையைத் தொட்டு இழுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. நிதீஷ் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "முகத்தைத் தொட்டதற்கே இவ்வளவு சத்தமா? வேறு எங்காவது தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?" என்று பேசியதும் விவாதத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.