Rahul Gandhis body is like Kapur Singh
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உடல்மொழியும் பேச்சும்தான் ‘கப்பார் சிங்’போல் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியை கப்பார் சிங் டேக்ஸ் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வந்ததற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.
கப்பார் சிங் என்பது, ‘ஷோலே’ இந்தி திரைப்படத்தில் வரும் வில்லன் பெயராகும். மக்களிடத்தில் இருந்து பணத்தை பறித்துக்கொள்பவரே கப்பார்சிங். அதை ஜி.எஸ்.டிக்கு ஒப்பாக ராகுல்காந்தி கூறி விமர்சித்தார்.
போபால் நகரில் நேற்று நடந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய சிறு, குறு, நடுத்த தொழில்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
ஜி.எஸ்.டி. வரியைப் பார்த்து பலர் கூப்பாடுபோடுகிறார்கள். ராகுல்காந்தி(இளவரசர்) கூட ஜி.எஸ்.டி. வரியை கப்பார் சிங் வரி என்று விமர்சிக்கிறார். ஆனால், இது கப்பார் சிங் வரி இல்லை. ராகுல் காந்தி தவறாக பேசுகிறார். ராகுலின் பேச்சும், உடல் மொழியும்தான் கப்பார் சிங் போல இருக்கிறது.
கதவுகளை மூடிக்கொண்டு காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் ஜி.எஸ்.டி. வரிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால், வெளியில், அந்த கட்சியின் துணைத்தலைவர் ராகுல், ஜி.எஸ்.டி. வரியை கப்பார் சிங் வரி என விமர்சிக்கிறார். இது இரட்டை நிலைப்பாடாக இருக்கிறது. வர்த்தகர்களின் கவலையை உணர்ந்த மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
ரூபாய் நோட்டு தடையின் மூலம் மக்கள் சில சிரமங்களைச் சந்தித்தபோதிலும், பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிறிது கூட அசையவில்லை.
சட்டமேதை அம்பேத்கர், நாட்டின் பணத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செய்வதற்கு அச்சப்பட்டு மறுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
