பாஜக தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் எழுந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிலளித்துள்ளார். ஒரே ஒரு சம்பவத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்ற அவர், இதற்கு நேரு, இந்திரா காந்தியை உதாரணமாகக் காட்டினார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.
நீண்டகால பொதுச் சேவையில் ஈடுபட்ட ஒருவரை ஒரே ஒரு சம்பவத்தைக் கொண்டு மட்டும் எடைபோடுவது நியாயமல்ல என்ற அவர் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை உதாரணம் காட்டிப் பேசியுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) தனது 98வது பிறந்தநாளைக் கொண்டாடிய அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து, சசி தரூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். வாழ்த்துச் செய்தியுடன் அவரும் அத்வானியும் இருக்கும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
எல்.கே. அத்வானிக்கு சசி தரூர் தெரிவித்த வாழ்த்து
"மதிப்பிற்குரிய திரு. எல்.கே. அத்வானிக்கு 98வது பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது அசைக்க முடியாத பொதுச் சேவை ஈடுபாடு, அடக்கம், கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவின் திசையை வடிவமைத்ததில் அவரது பங்கு ஆகியவை அழியாதவை. பொது வாழ்வில் முன்மாதிரியான சேவை செய்த ஒரு உண்மையான ராஜதந்திரி அவர்" என்று சசி தரூர் புகழ்ந்திருந்தார்.
தரூர் அத்வானியைப் புகழ்ந்ததற்கு, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மறுப்பு தெரிவித்தார். அத்வானியின் 1990 ராம ரத யாத்திரையை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்த அவர், நாட்டில் வெறுப்பின் விதைகளைக் கட்டவிழ்த்துவிடுவது பொது சேவை ஆகாது என்று பதில் கூறியிருந்தார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு பெருமளவில் மக்களைத் திரட்டிய நிகழ்வாக இந்த ரத யாத்திரை பார்க்கப்படுகிறது.
நேரு, இந்திராவை உதாரணம் காட்டி சசி தரூர் விளக்கம்
வழக்கறிஞர் ஹெக்டேயின் விமர்சனத்தால் சசி தரூர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. ஒரு அரசியல்வாதியின் நீண்ட கால சேவையை ஒரே ஒரு சம்பவத்திற்குக் குறைப்பது நியாயமற்றது என்று அவர் வாதிட்டார்.
"அவரது (அத்வானியின்) நீண்ட கால சேவையை, ஒரே ஒரு சம்பவத்தை வைத்து குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றது. நேருஜியின் ஒட்டுமொத்தப் பணியையும் சீனப் போரின்போது ஏற்பட்ட பின்னடைவைக் கொண்டு மட்டும் மதிப்பிடுவது தவறு. அதுபோலவே, இந்திரா காந்தியின் ஒட்டுமொத்தப் பணியையும் அவசரநிலை பிரகடனத்தைக் கொண்டு மட்டும் மதிப்பிடுவது தவறு. அதே மரியாதையை நாம் அத்வானிக்கும் வழங்க வேண்டும்" என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புகள் குறித்துப் புகழ்ந்து பேசியபோதும், அண்மையில் வாரிசு அரசியல் குறித்து எழுதிய கட்டுரையிலும் நேரு-காந்தி குடும்பத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டினார். இதுபோன்ற தொடர் முரண்பாடுகள் கட்சிக்குள் இவர்மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன.
