ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை சூறையாடிய இந்திய மாணவர் கூட்டமைப்பு.. பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கண்டனம்
கேரளாவில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை இந்திய மாணவர் கூட்டமைப்பு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உறுப்பினர்கள் கொடூரமான முறையில் தாக்கினர்.
சுமார் 30க்கும் மேற்பட்ட எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் குழு ஏசியாநெட் நியூஸின் அலுவலகத்துக்குள் புகுந்து பாதுகாப்புப் பணியாளர்களைத் தள்ளி, முழக்கங்களை எழுப்பி ஊழியர்களை மிரட்டினர். எஸ்.எப்.ஐ (SFI) என்பது ஆளும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பாகும். கேரள போலீசார் வருவதற்கு முன்பு, ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் முன்பு மோசமான பேனரை கட்டினர்.
இதுகுறித்து ஏசியாநெட் நியூஸ் நாளிதழின் ரெசிடென்ட் எடிட்டர் அபிலாஷ் ஜி நாயர் அளித்த புகாரின் பேரில் பாலாரிவட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் மீது ஐபிசியின் 143 (சட்டவிரோத கூட்டம்), 147 (கலவரம்) மற்றும் 149 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.எப்.ஐ அமைப்பினர் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் புகாருடன் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, கேரள அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, "எர்ணாகுளத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டிய SFI செயல்பாட்டிற்கு நாங்கள் கவலை மற்றும் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இந்த சம்பவத்தை கேரள அரசு விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?