ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19-வயது மாணவி காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், மகேந்திரகார்க் மாவட்டம், கனினா நகரைச் சேர்ந்த 19-வயது மாணவி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பான மதிப்பெண் எடுத்தமைக்காக ஜனாதிபதியிடம் விருது பெற்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மாணவி தன்னுடைய கிராமத்துக்கு அருகே இருக்கும் கோச்சிங் சென்டருக்குச் சென்றார். அப்போது, செல்லும் வழியில் காரில்வந்த 3 இளைஞர்கள் மாணவியை கடத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிலர் இருந்துள்ளனர், இவர்கள் அனைவரும் அந்த மாணவிக்கு மயக்க மருந்து செலுத்தி கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை பேருந்து நிலையத்தில் கிடத்திவிட்டு தப்பிவிட்டனர்.

பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அந்த பெண் குறித்து பெற்றோருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பின் போலீஸார் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து இந்தசெயலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்துள்ளனர், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஏஎஸ் சாவ்லா கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ ஆய்வு நடக்கிறது. அந்த பெண்ணின் புகாரையடுத்து, முதல்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளோம். இந்த செயலில் ஈடுபட்ட அனைவரும் அந்த மாணவி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் ெதரிவித்தார்.

அந்த பெண்ணின் பெற்றோர் கூறுகையில், நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது அதை வாங்க மறுத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று தெரிவித்தனர் நீண்ட நேர வாக்குவாதத்துக்குப்பின் புகாரைப் பெற்றனர். என்னுடைய மகள் 12-ம் வகுப்பில் மோடியிடம் விருது வாங்கியவர். பெண்குழந்தைகளை காப்போம் என்று மோடி கூறுகிறார் இப்படி நடந்தால், பெண்குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது ஜூரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தமான போலீஸ் நிலையத்துக்கு அந்த எப்ஐஆர் மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.