டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் மருத்துவ பயன்பாடுகளுக்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இரண்டு மடங்கு அளவிற்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

கடந்த 2019-2020 நிதி ஆண்டின் போது இந்தியாவில் இருந்து  சுமார் 4502 மெட்ரிக் டன் அளவிற்குஆக்சிஜன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 9294 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்த காரணத்தினால் தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் இந்த தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் இருந்து இரண்டு வகையான ஆக்சிஜன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆக்சிஜன் என இரண்டு வகையில் ஆக்சிஜன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு 9884 மெட்ரிக் டன் அளவிற்கு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆக்சிஜனைத்தான் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் வெறும் 12 டன் அளவிற்கு மட்டுமே மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தொழில் துறைக்கு தேவையான ஆக்சிஜனை உயிர் காக்கும் ஆக்சிஜனோடு ஒப்பிட்டு சிலர் உள்நோக்கத்தோடு வதந்தி பரப்பி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 2675 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜன் தேவை இருந்ததாகவும் ஆனால் ஜனவரி மாதம் இந்த தேவை 1418 மெட்ரிக் டன்னாக குறைந்துவிட்டதாகவும் மத்திய அரகூ கூறியுள்ளது. கொரோனா முதல் அலையின் போது ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2800 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் இரண்டாவது அலையின் போது இது 5ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

அதே சமயம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 7ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அப்படி இருக்கையில் 5ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே தேவை உள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியாகும் தகவல் மத்திய அரசை குழப்பம் அடைய வைத்துள்ளது. மேலும் முழு உற்பத்தி திறனையும் கொண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உண்மை இப்படி இருக்க மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தான் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று கூறப்படுதில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.