மணிப்பூர் வீடியோ: 7ஆவது நபர் கைது!
மணிப்பூரில் பெண்கள் வீடியோ விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லையென்றால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 63 நாட்களுக்கு முன்பே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுய்ரெம் ஹெராதாஸ் மெய்தி என்பவரை போலீசார் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் வீடியோ விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டவரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் மணிப்பூர் நிர்வாண ஊர்வலம், பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் தலைமறைவாக உள்ள 20 வயதான கபிச்சந்திரா என்பவரது வீட்டை மர்ம கும்பல் தீக்கிரையாக்கியது. தவுபால் மாவட்டம் வாங்ஜிங் பகுதியில் உள்ள அவரது வீட்டையும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹுய்ரெம் ஹெராதாஸ் மெய்தி என்பவரது வீட்டையும் மர்ம கும்பல் ஒன்று தீ வைத்து கொளுத்தியது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் தஞ்சமடைந்துள்ளனர்.